Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை

அன்பு மிகுந்த ஆன்மநேய பெருமக்களே,



சுத்த சன்மார்க்கத்தின் பிரதான நோக்கமே மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதாகும். அதற்கு ஜோதிடம் எண் கணிதம், கைரேகை போன்ற சாஸ்திர முறைகள் தேவையா, இல்லையா என்பது பலரின் கேள்வி நிலையாக உள்ளது. இதில் ஒருசாரர் இதுபோன்ற சாஸ்திர வரைமுறைகள் வாழ்வியலுக்கு தேவையென கருதுகின்றனர். சிலர் சுத்த சன்மார்க்கத்திற்கு இவையெல்லாம தடை என்று கூறுகின்றனர். இந்த முரண்பாடான கருத்துகளிலிருந்து நாம் தெளிவடைய இந்த சாஸ்திரங்களைப் பற்றி சில அடிப்படை கருத்துகளை தெரிந்துக் கொண்டால் பின்னர் அவரவர் விருப்பப்படி தெளிவான முடிவுக்கு வரலாம்.

ஜோதிடம்

ஜோதிடம் வானவியல் கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சு அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டுச் சொல்வது. மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்பவெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது. இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் சில ஆசிய நாடுகள் இந்த முறையை சற்று அதிகமாக நம்புகின்றன.

கோள்கள் சுற்றி வரும் பாதையை வட்டவடிவமாகக் கொண்டு அந்த வட்டத்தை 30º என்ற முறையில் பிரித்து 360º (டிகிரிக்கு) 12 ராசிகளாகப் பிரித்து அதன் அடிப்படையில், பலாபலன்களை தெரிந்து சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ளது. “சோதிடம்” சோதித்து, திடமாக கூறுதல் என்று பொருள். அதாவது, வானவியலில் சூரியனை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்களின் இருப்பிடத்தை கணக்கிட்டு, ஒருவர் பிறந்த நேரத்தில சூரியனது நேர்கிரகணங்கள் எந்த கிரகத்துடன் இணைகிறதோ அதை லக்னம் எனவும் கணக்கிட்டு, குறிப்பிடுவது வழக்கம். அதேபோல் மற்ற கிரக நிலைகளையும், கிரக கூட்டு நிலைகளையும் கணக்கிடுவது வழக்கம். இந்த நிலையில் பலாபலன்கள் சொல்லப்படுவது காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பலாபலன்களை துல்லியமாக கணித்து கூறியவர்கள் பாலஜோதிட நிபுணர்கள். விஞ்ஞான காலத்திற்கு முன்பே இருந்துள்ளார்கள். அதாவது விஞ்ஞான அறிவு செயல்படுவதற்கு முன் மெய்ஞான அறிவின் ஒருபகுதியாக இந்த ஜோதிடம் இருந்திருக்கிறது என்பது உண்மை.

ஒரு வரலாற்றுச் சான்று

உஜ்ஜயினியை ஆண்ட மன்னனிடத்தில் வானவியல் சாஸ்திரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கியவர் ‘வராகமிகரர்’ என்ற ஞானி. உஜ்ஜயினி மன்னனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அப்பொழுது, அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த வராகமிகரர், ‘இந்த குழந்தை 16 வயதில் காட்டுப் பன்றியால் மரணமடைவது உறுதி’ என கூறுகிறார். அரசனுக்கு ஒருபுறம் வருத்தமும், கோபமும் உண்டாகிறது. பின்னர் பல ஞானிகளின் கருத்துப்படி அரசகுமாரனுக்கு மரணமில்லை என்றும், அப்படியே மரணமடைந்தாலும், நம்மிடம் மகாகவி காளிதாசர் உள்ளார். அவர் கவி பாடி உயிர்ப்பித்து விடுவார் எனக் கூறினர். ஆனால், வராகமிகரர் தனது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் அரசகுமாரன் இறப்பது உறுதியெனக் கூறி அரச சபையை விட்டு வெளியேறி விடுகிறார். பின்னர், 16 வருடங்களுக்குப் பிறகு அரசகுமாரனைக் காக்க அநேக பணியாட்களை அமர்த்தி, எந்த விலங்குகளும் செல்லாத அரச மாளிகையில் வைத்து பாதுகாத்து வந்தான். ஒருநாள் அரசகுமாரன் உப்பரிகையில் (மேல்மாடியில்) நண்பர்களுடன் விளையாடும் பொழுது, மேலே தொங்கவிடப்பட்டிருந்த ‘காட்டுப்பன்றி வெண்கலச்சிலை’ அறுந்து விழுந்து அரசகுமாரன் இறந்து விடுகிறான். காட்டுப்பன்றி தான் அந்த நாட்டின் தேசிய விலங்கு. எனவே அதை சிலையாக வடித்து அரண்மனையின் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்தான் மன்னன். இங்கே வராகமிகரரின் ஜோதிட சாஸ்திரம் உண்மையானது.

உடனடியாக அரசன் மகாகவி காளிதாசரை வரவழைத்து கவிபாடி அரசகுமாரனை எழுப்பக் கூறினார். அவரும் விரைந்து வந்து இறந்து கிடந்த அரசகுமாரனைப் பார்த்து, நான் பாடினாலும் அரசகுமாரன் எழுந்திருப்பது சாத்தியமில்லை எனக் கூறிவிடுகிறார். அதுகேட்டு அரசனும், மற்றவர்களும் துடிதுடித்து ஏன் என வினவ, அரசகுமாரனின் தலை முற்றிலும் சிதைந்து விட்டதால் உயிப்பிப்பது இயலாத காரியம் எனக் கூறி விடுகிறார்.

இந்த நிகழ்ச்சி நடந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் மிக அதிகமாக உள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து ஒரு செய்தி நமக்கு தெளிவாகிறது. வராகமிகரர் தனது அரசவை பதவியை விட்டுச் சென்றார். அதாவது அவர் உண்மையான பற்றற்ற நிலையில் வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட ஞானியர் கணித்துக் கூறுவது முற்றிலும் உண்மையாக நடக்கும் என்பதே.

மகாபாரதத்தில் சில செய்திகளைக் காண்போம். மகாபாரதப் போருக்கு களபலி பூஜை செய்ய நல்லதொரு நாளான ‘அமாவாசை’ தினத்தை சகாதேவன், துரியோதனனுக்கு குறித்துக் கொடுத்ததாகவும், அதை கிருஷ்ணன் அறிந்து அமாவாசை தினத்தையே மாற்றி அமைத்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனால் போரில் கௌரவப்படை தோற்று, பாண்டவர்கள் வென்றதாக கூறப்படுகிறது. இதில் சகாதேவனும், துரியோதனன் பகைவன் எனத் தெரிந்தும், சரியான நாளைத்தான் குறித்துத் தந்தான். ஆனால், இங்கு ஜோதிட சாஸ்திரம் பொய்த்து விட்டது. சகாதேவனும் பற்றற்ற நிலையில் தான் கூறியுள்ளார்.

உஜ்ஜயினி அரசன் விஷயத்தில் மிகவும் இயற்கையாக நடக்க உள்ள நிகழ்வை கணித்துக் கூறியுள்ளார்.

மகாபாரதத்தில் அதர்மத்தையே சரியென கூறி வாதாடும் துரியோதனனுக்கு சரியான நாளை குறித்துக் கொடுத்தது தர்மத்திற்கு விரோதம் என்பதை உணர்த்த கிருஷ்ணன் அமாவாசையை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு கருத்தும் தெளிவிக்கப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக எந்த ஒரு சாஸ்திரமும் தவிடு பொடியாகி விடும் என்பது தான்.

எனவே, வானவியல் சாஸ்திரம் என்பது கலைநிகழ்வுகளைக் கூறும் கலையறிவு தான்; அது மட்டுமே முழுமையான வாழ்க்கையென நம்பிவிடக் கூடாது என்பது தான். எனவே ஜோதிடம் சில குறிப்புகளை அறிந்து சொல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.

இந்திய சாஸ்திரத்தில் ஜோதிடத்தையே மிகப்பெரிய விலையாக மக்கள் வாழ்க்கையுடன், பின்னி பிணைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழும்படி செய்து விட்டனர் பிற்கால ஜோதிட வல்லுநர்கள். இதற்கு காரணம் ஜோதிடத்தை ஒரு தொழிலாகக் கொண்டவர்கள் செய்த சூழ்ச்சி. அனைத்துவித சாஸ்திர பாதிப்புகளுக்கும் (தோசங்களுக்கும்) ஒரே நிவாரணம், தயவுதான். அதன் அடிப்படையில் கூறப்படும் ‘ஜீவகாருண்யம் தான்’ என்பதை வெளிப்பட மக்களுக்கு எவரும் தெரிவிக்கவில்லை.

ஆனால் சுத்த சன்மார்க்க நிலையைக் கூறிய வள்ளற் பெருமான் ஜீவகாருண்யப் பகுதியில் கூறும்போது, சில உபாய அறிவுகளால் ஆயுள் குறைவென்று தெரிந்து கொண்டவர்கள், ஆதரவற்ற, ஏழை எளியவர்க்கு உணவளிப்பதையே விரதமாகக் கொண்டு செயல்பட்டால் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளும் நீங்கும் என பெருமான் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் ஒருசில விசயங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். ஜோதிடம், எண்கணிதம், கைரேகை சாஸ்திரம் இவையெல்லாம் இவ்வுலக பற்றியலில் உள்ளமட்டும் ஓரளவு பயன்படும்.

ஆனால் சுத்த சன்மார்க்கத்தின் அனுபவநிலைகளை உள்நோக்கும் பொழுது திருஅகவலில் (எண் 1561 முதல் 1570 வரை)

உலகியல் சிறிதும் உளம்பிடியா வகை

அலகில் பேரருளால் அறிவது விளக்கி

சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது

உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்

சாகாவரத்தையும் தந்து மேல் மேலும்

அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்

இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்

என்று திடமாகக் கூறுகிறார். எனவே சன்மார்க்க மேல்நிலை அனுபவமான ‘சித்திநிலையை’ அடைய முயற்சி செய்வதே சன்மார்க்க அன்பர்களின் வாழ்வியல். அதற்கு ஜோதிடம் போன்றவற்றை உபாய அறிவாக மட்டுமே கொள்ள வேண்டும். பரிகாரம் என்று வரும்பொழுது ‘ஜீவகாருண்யமே’ முதன்மையானது என உணர்ந்து பல்வேறு சாஸ்திர முறையில் சொல்லப்பட்டவைகளை, பரிகாரங்களை செய்யாமல் இருப்பது நலம்.

வாஸ்து சாஸ்திரம் (மனையடி சாஸ்திரம்)

வாஸ்து சாஸ்திரம் பஞ்சபூத நிலைகள், மற்ற கிரகங்களின் பகுதிநிலை வேறுபாட்டை வைத்து கூறப்படுவது. இது சாலை விதிகள் (டிராபிக் ரூல்) போன்றது. சாலையில் செல்பவர்கள் வலதுபக்கம் திரும்புவது, இடது பக்கம் திரும்புவது, மேலும் எங்கு சாலையைக் கடப்பது போன்ற விதிகளைப் போல் (சட்ட அடிப்படையைப் போல்) கடைப்பிடிக்கலாம். இதில் தவறில்லை. ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கையை தந்துவிடாது.

இதற்கான சில உதாரணங்களை காண்போம். மகாபாரதத்தில், இந்திரப்பிரஸ்தம் என்ற இடத்தில் தேவர்களுக்கு கட்டிடம் அமைக்கும் கட்டிட விற்பன்னரே நேரில் வந்து அந்த மாளிகையை கட்டியதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கட்டிய கட்டிடம் முற்றிலும் 100 சதவிகிதம் சாஸ்திர முறைப்படி தான் கட்டப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அவர்களது அரசாட்சியே சூதாட்டத்தில் பறிபோய்விடுகிறது. பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. பஞ்சபாண்டவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களே துன்பப்பட வேண்டிய நிலைகள் ஏற்பட்டது. இது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். மகாபாரத குறிப்புகளில் அன்னதானம் பற்றி எங்குமே அவ்வளவாக சிறப்பித்து கூறப்படவில்லை. எனவே ஜீவகாருண்யம் இல்லாதவர்கள் துன்பப்படுவது உறுதி என்பது விளங்கும். எனவே வாஸ்து மிகச்சரியாக இருந்தாலும், உலகியல் பற்றுகளில் சிக்கியவர்களும், தயவு இல்லாதவரும் அதை கடைப்பிடித்து பயனில்லை.

வாஸ்து ஒரு இல்லத்தில் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஜீவகாருண்யமுடைய அதாவது கொலை, புலை தவிர்த்து, ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு உணவு வழங்குவதையே வாழ்வியலாகக் கொண்டால் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ‘ஜீவகாருண்யத்தின்’ பெரும்பலனாக பெருமான் கூறம் போது, “ஊழ்வினைகளால் ஏற்படும் தீமைகளிலிருந்தும், உலகியல் அஜாக்கிரதையால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்” எனக் கூறுகிறார். எனவே ஜீவகாருண்யமே அனைத்து துன்பங்களிலிருந்தும் மனிதனைக் காப்பாற்றும் உண்மைவழி என்பதை உணர்வோம்.

எண் கணிதம்

எண்கணிதம் மேலை நாட்டவர்களால் பெரும்பாலும் நம்பப்படுகிறது. இது பொதுவான பலாபலன்களையே கூறுகிறது. இது உலகியலில் வியாபார ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

கைரேகை

கைரேகை மற்ற சாஸ்திர நிலைகளிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும், விஞ்ஞான காலத்தில் உருவான கலை. சிலர் வாழ்வியலை ஆராய்ந்து, அவர்களின் கைரேகைப்படி ஒப்பிட்டு எழுதப்பட அனுபவ நூல்.

இந்த அனுபவங்கள் ஒவ்வொருவரும் சற்று மாற்றிச் சொல்வது வழக்கம். மேலைநாட்டு விஞ்ஞானியான ‘கெய்ரோ’ என்பவர் அவரது கைரேகையின் ஆராய்ச்சி அடிப்படையில் ஒரு மரணதண்டனை கைதி நிச்சயமாக விடுதலை செய்யப்படுவான் என்று கூறி, அதை நிரூபித்து காட்டியதன் விளைவாக இது உலகியர் பலரால் சாதி, சமய வேறுபாடின்றி கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக கைரேகை சாஸ்திரம் என்பது புராண காலங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இல்லை. இந்த கைரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதால் தெளிவாக கைரேகை பார்க்கத் தெரிந்தவர்களால் மட்டும் ஒருசில நன்மை தீமைகளை சற்று கூற இயலும். இதற்கும் பரிகாரம் ‘ஜீவகாருண்யம்’ தான்.

ஆனால் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் இறைநிலையை அடைய இந்த சாஸ்திரங்கள் எந்த அளவிலும் குறித்துத் தர இயலவில்லை. எனவே தான், சாத்திரக் குப்பையென இவற்றை பெருமான் திருவருட்பாவில் சாடுகிறார். எனவே தான் சமயங்களிலும் எவ்வித பற்றும் கூடாது என்கிறார். ஏனெனில் இவ்வித சாஸ்திரங்களும, சாதி, சமய வாழ்க்கையும் உலகியல் பற்றை மேலும், மேலும் பலப்படுத்தி சிலந்திவலையில் சிக்கிய பூச்சியைப் போல மனிதன் வாழ்க்கை ஆகி விடும். பின்பு மரணமடைந்து, பிறந்து பிறந்து உழல வேண்டியது தான். பிறவிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த சாஸ்திரங்களிலும், சமய மத வழிபாடுகளிலும் எந்தவித நிலையான வழிமுறைகளும் இல்லை. எனவே சன்மார்க்க அன்பர்கள் மேற்படி சாஸ்திர முறைகளை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றையே முழுமையான வாழ்வியலாக கருதுவது அறியாமையாகும்.

இப்படி சாஸ்திர முறைகளை அதிகமாக கடைபிடிப்பவர்கள் பெருமான் கூறக்கூடிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழவில்லை என்பதே பொருள். எனவே இக்கட்டுரையில் உள்ள செய்திகளை உள்வாங்கி சுத்த சன்மார்க்க வாழ்வியலுக்கு வர முயற்சி செய்யலாம். மேலும், பெரும்பாலான சன்மார்க்க அன்பர்கள் சாதாரணமாக ஏழை எளியவர்க்கும், நம் போன்ற சன்மார்க்க அன்பர்களுக்கும் உணவளித்து விட்டு ‘ஜீவகாருண்யம்’ சரணமாகி விடுவதாகக் கருதுவது சரியல்ல. இவையெல்லாம் திருக்குறளில் கூறப்பட்டது போல் ‘விருந்தோம்பல்’ செயல்களாகும்.

உண்மையான ஜீவகாருண்யம் என்பது பெருமான் கூறியபடி “ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு (அதாவது அநாதையாக வாழ்பவர்கள், ஆதரவின்றி உறவினர்களால் கைவிடப்பட்டவர் ஏழைகள்) உணவு வழங்குவதே உண்மையான ஜீவகாருண்யமாகும்.” எனவே நன்கொடை கொடுக்கும் அன்பர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பல கருணை இல்லங்கள் புலால் உணவு கொடுக்கின்றனர். எனவே இவற்றை தவிர்த்து பொதுநிலையில் செயல்படும் கருணை இல்லங்களுக்கு கொடுத்து உதவலாம். ஏனெனில் மற்ற அமைப்புகளுக்கு சாதி மத பிடிப்பு உள்ளவரும், பிற இனத்தவராகிய சன்மார்க்கம் சாராதவரும் உதவ உள்ளனர்.

குறிப்பு:

இக்கட்டுரை பற்றியும், ‘வள்ளலார் வருகையில்’ வெளியிடப்படும் பிற கருத்துக்கள் செய்திகள், சந்தேகங்கள் குறித்து http://www.vallalarspace.com இணைய தளத்திலோ அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். அன்பர்களின் சந்தேகங்களுக்கு தக்க பதிலை வள்ளற்பெருமானின் திருவருள் நிலைமுன் பெற்று, திருவருட்பா சான்றுகளுடன் ‘வள்ளலார் வருகையில்’ பதில் எழுதப்படும்.

வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி

12, வள்ளலார் தெரு, லோகேஷ் நகர்,

தென்றல் நகர் கிழக்கு திருமுல்லைவாயில்

சென்னை 600 062.

செல்பேசி: 9382872726

5 Comments
Vallalar Groups
Dear Vallalar Devotee,
Very Nice Article.. It will create "awareness" among public...
Endrum Anbudan..
Monday, December 29, 2008 at 22:50 pm by Vallalar Groups
valli ramanathan
Fantastic Sathyamorthy sir. Thanks for the article. valli.
Sunday, January 4, 2009 at 21:32 pm by valli ramanathan
Muthukumaaraswamy Balasubramanian
ஜாதகம் பார்த்து பத்து பொருத்தங்களும் உள்ளனவா என்று இரண்டு மூன்று ஜோதிடர்களை அணுகி சரி பார்த்துதான் பலர் திருமணம் செய்கிறார்கள்.ஆனால் எத்தனையோ திருமணங்கள் முறிந்து போகின்றன என்பது நாம் தினம் காணும் உண்மை. ஜோதிடம் என்பது வான சாஸ்திரம் என்பதை ஒப்புக்கொள்ளலாஆனால் சனியன் பிடிக்கிறது,அதற்குப் பரிகாரம் செய்யவேண்டும் என்பதும் ,குரு பார்வை வந்தால்தான் திருமணம் கைகூடும் என்பதும் உண்மை அல்ல. அதே போல் ஒருவர் பெயரோடு எண்கணிதப்படி ஒரு எழுத்தை சேர்த்துக்கொண்டால் அவரது வாழ்க்கையே மாறிவிடும் என்பது உண்மைக்குப் புறம்பானது.தாவு செய்து இதை எல்லாம் நம்பி ஏமாந்து பரிகாரங்கள் செய்து உழைத்து சம்பாதித்த காசை வீணாக்காதீர்கள். எனக்கு நான்கு பெண்கள் நான் யாருக்கும் ஜாதகம்பார்க்காமல்தான் திருமணம் செய்தேன். அனைவரும் சொந்த வீடு கட்டிக்கொண்டு குழந்தை களோடு நன்றாக வாழ்கிறார்கள். வாஸ்து எதுவும் நான் பார்த்து என் வீடு கட்டவில்லை. கலை உரைத்த கற்பனையே நிலை எனக்கொன்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் ,மண்மூடிப்போக. வள்ளலார்.
Monday, April 11, 2011 at 05:35 am by Muthukumaaraswamy Balasubramanian
venkatachalapathi baskar
மு.பா. ஐயா அவர்களே,

தாங்கள் மறுபடியும் வள்ளல் பெருமானின் கொள்கையை படித்தவர் மட்டுமில்ல, பின்பற்றுபவர் என்பதை காண்பித்து விட்டீர்கள்...நன்றி.
Saturday, February 6, 2021 at 13:21 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஜாதகம் பார்க்காமல் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்த அனுபவங்களை எழுதினால் பிறருக்கு உதவியாகவும் உத்வேகத்தை கொடுப்பதாகவும் இருக்கும்...
Thursday, February 11, 2021 at 09:36 am by venkatachalapathi baskar