Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
தெய்வ பாவனை - தொடர்-2

பாடல் - 1

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

மனிதன் பக்தி நிலையில் இறைவனின் அருள் ஒளியை நினைந்து பின் அதை உணர்ந்து அந்த ஒளி ஆற்றல் நமது ஆன்மாவிலும், சூட்சும தேகத்திலும் கலப்பதாக பாவிக்க வேண்டும். அப்படி பாவனை முழுநிலை அடையும் போது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும். பக்தி நிலையின் உயர்நிலை அனுபவமாகும் இது. எனவே இறை ஒளியை சோர்வில்லாது பாவனை செய்தல் வேண்டும். அப்படி உண்மையான அன்பு பரிணமித்து வளர வளர நாமும் அருள் ஆற்றல் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை அடைய இயலும் என தெளிந்து செயல்பட வேண்டும். மேலும் இந்த பக்தி நிலையில் இந்திரிய கரண ஒழுக்கமும் மேலோங்கும் போது, நமது தேகமானது இறை அருளால் வேதிக்கப்பட்டு, தூலதேகம் – படிப்படியாக சுத்த பிரணவ ஞானதேகமாக மாறும். இந்த தெய்வ பாவனையை முழு நம்பிகையுடன் செய்துவர நல்ல அனுபவம் கிடைக்கும். இதுவரை உலக ஞானிகளில் இது போன்ற எளிய, உண்மை நெறியை எவரும் கூறியதில்லை.

பொற்சபை அனுபவமாகி உலகியல் அருள் அனுபவத்திலிருந்து அதாவது சரியை, கிரியை நிலை அனுபவத்திலிருந்து மேலான யோக நிலை மற்றும் ஞான நிலை அனுபவமான ஞானநிலைக்கு உயரும் தருணம் இது. எனவே சற்றும் சோர்வில்லாமல் செய்ய வேண்டும்.



பாடல் - 2

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழி ஓர் பொய்மொழி என்னாதீர்
உகுந்த தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடமைகளும உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்த தனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

இந்திரிய, கரண ஒழுக்கங்களை முயன்று, முயன்று கடைபிடித்து வாழ்ந்து தருணம் – என்ற இதைக் குறிக்கிறது. உலகியல் வாழ்பவர் மரணமடைகின்றனர். அந்த தருணத்தில் உற்றார், உறவினர் எனக் கூறப்படும் தாய், தந்தை, மனைவி, மக்கள், மற்ற உறவுகள் எவரும் உற்றத்துணையாக இருப்பதில்லை. இதை உணர்ந்து தாய், தந்தை, மனைவி, மக்கள், மற்ற உறவினர்களாக இறைவனே வந்து இவ் உலகவாழ்விலும் சரி. அதைச் சார்ந்த அருளியல் வாழ்விலும் பக்குவித்த பல அனுபவங்களைத் தருவதும், அப்படி அருள் அனுபவங்களைப் பெற வேண்டுமாயின் மேற்சொன்ன உலகியல் பற்றுகளை நீக்கி, உலகியலில் கிடைத்த அனுபவத்தை அருள் அனுபவமாக மாற்ற நினைத்து தெய்வ பாவனை செய்தல் வேண்டும்.

இறை அருள் வல்லபமானது இந்த உலகியல் பொருட்களின் மதிப்பை விட பன்மடங்கு பெரியது, உயர்ந்தது என்பதை உணர்ந்து தெய்வ பாவனை செய்தல் வேண்டும். “பொற்சபை” அனுபவம் என்பது – உலகியல் வாழ்வின் மூலம் கிடைத்த அனுபவம். இதை அடிப்படையாகக் கொண்டே அருளியல் அனுபவமான “சிற்சபை” அனுபவத்திற்குள் செல்ல இயலும். பொற்சபை அனுபவம் மனிதனுக்கு எளிதில் புரியும்படி இருக்கும். சிற்சபை அனுபவம் மறைபொருளாய் இருந்து காரியப்படும்.



பாடல் - 3

பணிந்து பணிந்து அணிந்து அணிந்து பாடுமினோ உலகீர்
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே
துரியமுடி அனுபவமே சுத்த சிந்தாந்த தமதாய்த்
தணிந்த நிலைப் பெருஞ்சுகமே சமரச சன்மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கனிந்துளத்தே கனிந்து நினைத்து உரைத்திடிலப் பொழுதே
காணாத காட்சி எலாங் கண்டு கொளல் ஆகமே.

ஒளிநிலையில் உள்ள இறைவனிடம் (தீப முன்னிலையில்) பணிந்து பணிந்து விண்ணப்பித்தல் வேண்டும். பணிவு இல்லாவிடில் தற்போதம் ஏற்பட்டு அருள்நிலைவாழ்வில் தவறான பலன்கள் ஏற்படும். இதை திருக்குறள்,

அடக்கம் அமரருள் உய்க்கும் – அடங்காமை
ஆருயிர் உய்த்து விடும்.

என்று கூறுகிறது. தன்னடக்கம் மிக மிக அவசியம். பிறர் தம் காலில் விழுந்து வணங்குவதை அனுமதிக்கக் கூடாது. அப்படி பணிவுடன் வணங்கும் போது அருள் அனுபவக் காட்சிகள் தோன்றும். பணிவுடன் இருந்தால் தயவு நிலையும் உயரும்.



பாடல் - 4

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமே உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனிநீர் சமரச சன்மார்க்க
மெய்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணந்தே
எண்புகு சிற்றம்பலத்தே எந்த அருளடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.

இந்தப் பாடலில் மிக முக்கிய செய்தியை வள்ளற் பெருமான் தருகிறார். இதுவரையும் நாம், கண்ட வெளிப்புற காட்சிகள், கேட்ட செய்திகள் கற்ற கல்விமுறைகள் அனைத்தும் நிலையற்றவை. எனவே தற்போது நாம் செய்யும் தெய்வ பாவனை மட்டுமே நிலையானது. இதுவே சுத்த சன்மார்க்கத்தின் ‘மெய்நெறியாகும்’.

இதை அகவலில் பெருமான்,

எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

இப்படி கண்டனை இனி உறுபடி எலாம்
அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி

எனவும் கூறுவார்.

அதாவது இந்த தூலதேகத்தை சுற்றியுள்ள சூட்சுமதேகம் (எட்டு) இரண்டு. ஒன்று ஆன்மா. மற்றொன்று ஜீவன். இதில் தெய்வ பாவனை நிலையில் ‘ஜீவன்’ மாயை, கன்மங்களிலிருந்து நீங்கி ஆனம நிலையை அடையும். ஆன்மாவானது சிறிது சிறிதாக ஆணவ மலத்திலிருந்து நீங்கி பரமான்ம நிலையை அடையும். அப்படி படிப்படியாக ஏற்படும் சிவநிலை அனுபவங்கள் இந்த சூட்சும தேகத்தில் கலந்து வேதிக்கும். அப்பொழுது ஆன்ம ஒளியின் சூட்சும தேகமாகிய ஒளிநிலையுடன் கூடி அருள் அனுபவ நிலையான “சிவா அனுபவம் ஏற்பட ஏதுவாய் இருக்கும். இந்த சிவா அனுபவம் தான் இறவா வரமாகிய மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றுத் தருவதாகும். எனவே இதுவரை நாம் எந்தவித அனுபவ நிலைகளில் இருந்திருந்தாலும், தற்போது இந்த தெய்வபாவனை செய்வதன் அவசியத்தை உணர்ந்து செய்தல் வேண்டும். ஆன்ம ஒளியும் சூட்சும தேக ஒளியும் சேர சேர சுத்த பிரணவ ஞானதேக மாற்றங்கள் படிப்படியாக உருவாகும்.



பாடல் - 5

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய்வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையின் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடை நன்கு ஒளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேற் பொருளே
வன்புடையார் பெறர் கரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.

இன்பம் மிகுந்த பேரின்ப வாழ்வைப் பெற்று வாழ ‘நாம் பூரண அன்புருவாய்’ மாறவேண்டும். அப்படி மாறிய நிலையில் தெய்வ பாவனை செய்யும் பொழுது, ‘அக வடிவு – அனக வடிவமாகும்’. அதாவது நமது ஆன்மாவாகிய சிறிய ஒளி தெய்வ பாவனையில் விரிவடைந்து அனகமாக – பூரண ஒளி தேகமாக மாறும். அப்படி மாறும் பொழுது இந்த ஆன்மாவை பி்டித்துள்ள வினைகள் யாவும் நீங்கி நலமடையலாம்.



பாடல் - 6

தீமை எல்லாம் நன்மையென்றே திரு உளங் கொண்டருளிச்
சிறியேனுக்கு அருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய்
அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியை ஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
ஒருபொருளைப் பெருங்கருணை உடைய பெரும்பதியை
நாமருவி இறவாத நலம் பெறலாம் உலகீர்
நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்மின்நீரே.

இந்தப் பாடலில் ஒரு செய்தியை நமக்குத் தருகிறார். அருள்நிலை அனுபவத்திற்கு ஒருவர் முயற்சி செய்யும் பொழுது மாயையின் உந்தலால் சில தவறுகளை செய்ய நேர்ந்தாலும், அந்த தவறுகளை மன்னித்து நன்மையைத் தருவார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். இங்கு ‘ஓமயவான் வடிவுடையார்’ என்பது பிரணவத்தேகம் பெற்ற நிலையில் உள்ளவரின் உள்ளத்தில் இறைவன் நிறைந்து இருப்பதாக உரைக்கிறார். அப்படி பிரணவ தேகநிலைக்கு உயர்ந்தால் நமது உள்ளத்திலும் இறை ஆற்றல் பூரணமாய் வந்து ஆட்சி செய்யும். அப்பேர்ப்பட்ட நிலையில் உள்ள இறை ஆற்றலை நமது சூட்சும தேகத்துடன் (மருவி) சேர்த்து இறவாத நிலையை அடையலாம்.



பாடல் - 7

நீர்பிறரோ யான்உமக்கு நேய உறவலனோ
நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்
தனித்தபெரும் சுகம் அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இது நல்லதருணம் இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்து.

இந்தப் பாடலில் கூறியபடி இறைவனின் சுயஞ்ஜோதி நிலையும் நமது ஆன்மஜோதி நிலையும் ஒன்றென உணர்ந்து, நாம் தொடர்ந்து இந்த தெய்வ பாவனை செய்ய வேண்டும். முன் பாடலில் விவரித்தபடி உள்ளம் ‘சிற்சபையில்’ நாட்டங்கொள்ளும். அந்த தருணமே அருள் அனுபவம் பெற சரியான தருணம்.

உள்ளம் – மனம், சித்தம், புத்தி, அகங்காரம் இவை அனைத்தும் இறை அருளை சிந்திக்கும் நிலை. இது மனம் அடங்கும் நிலையாகும். சிற்சபையில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஒளி ஆற்றல் நமது சூட்சும தேகத்தில் கலக்க வேண்டும். அப்படி தொடர்ந்து தெய்வ பாவனை செய்தால் ஒளிஅனுபவம் கிட்டுவது உறுதி.

இப்பாடலில் உலகியலீர் என நம்மை ஏன் குறிப்பிட வேண்டும்? சன்மார்க்கத்திற்கு வந்தும் நாம் இந்த உலகியல் வாழ்வில் தான் நாம் அதிகமாக கவம் செலுத்துகிறோம். எனவே இந்த உலகியல் மாயைகளை, பாசம், இச்சை போன்றவற்றிலிருந்து விடுபட்டு வாழப் பழகுதல் வேண்டும்.



பாடல் - 8

விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்
திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்து வரைந்து எல்லாம் செய்வல்ல சித்தன்தானே
வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவிர்
கரைந்து கரைந்து உளம் உருகிக் கண்களில் நீர் பெருகிக்
கருணை நடக் கடவுளை உட்கருதுமினோ களித்தே.

மேற்படி அனுபவ நிலைகளை விரைந்து பெற்றிட வேண்டும் என பெருமான் இப்பாடலில் கூறுகிறார். ஏனெனில், இவ்வளவு காலம் சன்மார்க்கத்திற்கு வந்தவர்கள் உண்மை அனுபவ நிலையை உணராது ஏனோ வீண்காலம் கழித்து விட்டோம். தேகம் தளர்ந்து விட்டது; இனிமேல் நம்மால் இனி அனுபவ நிலைக்கு முயற்சிக்க இயலாது என்ற நினைப்பு ஏற்படும். அந்த தளர்ச்சியை முழுதும் நீக்கி, முயற்சி செய்து அருள் அனுபவ நிலைகளைப் பெற்று தளர்ந்த இந்த உடலை நல்ல ஆரோக்கிய மிக்க உடலாக மாற்றி இளமை செயல்பாடுகளுடன், இயல்பான புத்துணர்ச்சியுடன் வாழலாம். இதை எடுத்துரைப்பதாக, திரைந்து திரைந்து உளுத்தவரும் இளைம அடைந்திடவும் என இந்த பாடலில் சிறப்பித்துக் கூறுகிறார்.

கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை, வல்லாரை, சீரகம், மிளகு, புளியாரை போன்ற மூலிகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து உடல் உபாதைகளை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும், செத்தவர்கள் எழுந்திவுடம் என்ற சொல், இவ் உலகில் மனித தேகம் பெற்றவர் அனைவரும் இறந்து போகின்றனர் என்றே அனைவரும் கருதி அதே சிந்தனையில் வாழ்ந்து செத்துவிடுகின்றனர். வள்ளற் பெருமான் ஒருவரே மனிதன் மரணத்தை வென்று வாழமுடியும் என்ற முழுமையான ஏற்றமிகு நம்பிக்கையை இந்த மனித இனத்திற்கு உரைக்கிறார். அதன்படி நாமும் மரணத்தை வென்று வாழ முடியும் என்ற முழுமையான ஏற்றமிகு நம்பிக்கையை இந்த மனித இனத்திற்கு உரைக்கிறார். அதன்படி நாமும் மரணத்தை வென்று வாழ முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் “செத்தவர்கள் எழுந்திட்ட” நிலையடைந்தவர் ஆவர். எனவே மனிதன் மரணமடையாது வாழமுடியும் என்ற நம்பிக்கை நமது வாழ்வின் முதல் வெற்றியாகும்.

இதே நம்பிக்கையுடன் தீப ஒளியின் முன் அமர்ந்து தெய்வபாவனை செய்தல் வேண்டும். நமது முயற்சி மேலோங்க. மேலோங்க நமது கண்களில் தானாக கண்ணீர் சுரந்து வரும். அப்படி தெய்வபாவனை செய்தல் வேண்டும்.



பாடல் - 9

துளித்துலகில் அளவிகந்த காலம் உலகு எல்லாம்
களிப்படைய அருட்ஜோதிக் கடவுள் வருதருணம்
தெளித்திடும் அத்தருணம் ஏதோ எண்ணாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர்
ஒளித்து உரைக்கின்றேன் அலநான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன்
ஒரு சிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே
ஆசை உண்டேல் வம்மின் இங்கே நேசமுடையீரே.

இறை அருள் அனுபவத்திற்கு செல்லச் செல்ல களிப்பு (மகிழ்ச்சி, பேரின்பநிலை) ஏற்படும். அதே போல் இவ்உலகமும் பேரின்பத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இதுவே இறையருள் நம்முள் காரியப்படும் தருணமாகும். இத்தருணத்தில் செத்தாரை எழுப்புதல் இயலும். செத்தாரை எழுப்புவது என்பது இறந்து கிடக்கும் பிரேதத்தை எழுப்புவதல்ல. நாம் இறந்து விடுவோம் என்ற எண்ணத்தை மாற்ற நம்மால் இறவாமல் வாழலாம் என்ற உறுதியை ஏற்படுத்திக் கொள்ளுதலாகும்.

இத்தன்மை பெருமானுககு இருந்ததால் அந்த உண்மை நம்பிக்கையை நமக்குக் கூறினார். அதேபோல் சன்மார்க்கத்தில் வந்த அனைவரும் மரணத்தை வெல்ல இயலும் என்ற உறுதியைப் பெற இயலும், என்ற உறுதியுடன் நமது ஆன்ம ஒளியையும், தீப ஒளியையும் சிந்தித்து தெய்வபாவனை செய்தல் வேண்டும்.


(தொடர்ச்சி அடுத்த இதழில்....)

3 Comments
valli ramanathan
Thank you for giving explanation for Gana sariyai. ( Long time i am waiting for this.) Thank you.
Thursday, June 4, 2009 at 06:52 am by valli ramanathan
valli ramanathan
Please continue this article sir.
Wednesday, October 14, 2009 at 12:42 pm by valli ramanathan
valli ramanathan
Sathya moorthy Ayya,
Please continue the article.
Friday, April 23, 2010 at 19:09 pm by valli ramanathan