Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்கம் வளர்ப்போம் சாகாவரம் பெறுவோம் இது எப்படி சாத்தியமாகும்?

வண்டமிழ்ப் புலமையில் உதித்த செஞ்சுடர் ஞானிகள் சான்றோர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். அவர்களில் உலகிற்கு உண்மைச் செய்தியை தந்த ஞானிகள் ஒரு சிலரே, திருமூலர், அகத்தியர், போகர், திருவள்ளுவர், ஒளவையார் போன்ற உயர் அறிவைப் பெற்ற ஞானிகளாகும், இவர்கள் தோன்றிய காலகட்டத்தில் மக்கள் அவ்வளவாக கல்வி அறிவும் விழிப்புணர்வும் இல்லாது இருந்ததால் இவர்களின் வாழ்வியல் உண்மை கருத்துக்களையும், இறைவனைப் பற்றிய உண்மை நிலையையும் மக்கள் அறியவில்லை.

இந்தச் சூழலில்தான் சமயங்கள் மக்களின் அறியாமை நிலையை பயன்படுத்தி உருவ வழிபாட்டுமுறையை உருவாக்கி பூஜை, யாகம், போன்ற பக்தி மார்க்கத்தை மக்களிடையே புகுத்தி, அவரவர் மதங்களுக்கு தனித்தனி தெய்வம் உண்டென மக்களிடம் சில மூட நம்பிக்கைகளையும் புகுத்தி விட்டனர். மக்களும் இவற்றை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டனர். கிட்டதட்ட 2000(இரண்டாயிரம்) ஆண்டுகளாக சமயங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.

இந்தச் சூழலை மாற்றவேண்டும் என எண்ணி இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் அனைவரும் கூறிய உயர்ந்த நெறிகளை தொகுத்து ஒரு பொதுவான இறை வழிபாட்டையும், வாழ்வியல் முறையையும் உருவாக்க எண்ணி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இராமலிங்க அடிகள் என்றும் வள்ளலார் என்றும் சிறப்புப் பெயர் கொண்ட திருவருட்பிரகாசர் என்ற சுத்த ஞானியை இவ்வுலகிற்கு அனுப்பி சுத்த சன்மார்க்க நெறியை உலகிற்கு தந்தார்.