பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
Write a comment