தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
Write a comment