ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே.
ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
Write a comment