அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
Write a comment